Search This Blog

Tuesday, June 7, 2016

கலைமணி  கொத்தமங்கலம் சுப்பு

           ஆக்கியோன் : கவிமாமணி இலந்தை சு இராமசாமி

வஞ்சத்தில்….

நாட்டுப்புற மக்கள்மொழி கேட்டுக் கேட்டுக் கிறங்கியவர்
     நாட்டுப்புறப் பாடல்பாடி மயங்கவச்சாருநாம்
     நகர்ப்புறத்தை விட்டுக் கொஞ்சம் இயங்கவச்சாரு
ஏட்டுக் குள்ளே  கிராமத்தையே ஏந்திவந்து பேச்சுமொழி
     என்னுமொளி தீபத்தையே ஏத்திவச்சாருஅதன்பால்
     இத்துணூண்டு நம்மனத்தை மாத்திவச்சாரு
ஆட்டம் போட்டுப் பாட்டுப்பாட தெம்மாங்கு வண்டிப்பாட்டு
     அற்புதமாய் திரைப்படத்தில் எழுதிவச்சாருஅதனை
     ஆனந்தமாய் மனவயலில் உழுதுவச்சாரு
கூட்டம் கூடி நாட்டுப்புறப் பாமரர்கள் பாட்டுப்பாடி
     கொத்தமங்கலத்தார்புகழ்  சொல்லவச்சாரு- அந்தக்
     கொண்டாட்டத்தில் அவர்கள் நம்மை வெல்ல வச்சாரு.
**
காந்திமகான் கதையைச் சுப்பு பாடும்போது கேக்கணுமே
     கண்களிலே நீர்வழிந்தே ஓடும்அவர்கண்
     கசிந்திருக்க அவரது வாய் பாடும்
பாந்தமுடன் தில்லானா மோகனாம்பாள் கதையெழுதி
     பரதத்தை உச்சி ஏறச் செய்தார்ஊடு
     பாவாக நாதஸ்வரம் நெய்தார்
ஏந்துபுகழ் ஔவையாராம்  திரைப்படத்தைத் தான்நடத்தி
     இலக்கியத்தைச் சினிமாவில்  ஏற்றிவைத்த
     ஈடில்லாத் தொண்டுக்கொரு போற்றி!
சாந்தமுடன் தேசபக்தி தான்மிகவும் கொண்டு கதர்
     தானணிந்தார் எந்நாளும் சுப்புஅவர்
     தமிழென்னும் ஆலமரக் கொப்பு.


கலைமணியாம் பேரினிலே கதைகதையாய் எழுதிவச்சுக்
     கலைநயங்கள் தாமொளிரச் செய்தார்அதில்நம்
     கன்னித்தமிழ்ப் பண்பாட்டைப் பெய்தார்
பலகலையும் கற்றசுப்பு எத்தனையோ திரைப்படத்தில்
     பக்குவாமாய் நடித்தார்பிறர் போற்றஅந்தப்
     பண்பதனை எப்படிநான் சாற்ற!
இலகுதமிழ் மொழியினிலே  வில்லுப்பாட்டு எத்தனையோ
     இவர்பாடித் தந்ததுவும் உண்டு- இவர்
     இசைக்கையிலே யாவையும் கற்கண்டு
கலகலென்ன நகைச்சுவையைக் கையாண்ட  விதம் பெரிது
     கண்டிடலாம் அவர்கதைகள் தம்மில்அதைக்
     கண்டவர்கள் பலர் உண்டு நம்மில்

அவர்தலைமை ஏற்கின்ற கவியரங்கில் சுவைகண்டால்
     அங்கவஸ்த்ரம் தானெடுத்து வீசிஅவர்
     அளித்திடுவார் கவிஞருக்கு ஆசி
உவகையுடன் அவரளித்த அங்கவஸ்த்ர ஆசிதனை
     உண்மையில் இரண்டுமுறை பெற்றேன்ரசனை
     உள்ளவர்பால்    ரசிக்கும்விதம் கற்றேன்
கவருகின்ற கடுக்கன்கள்  காதிரண்டில் தாம்ஜொலிக்கும்
     கையினிலே தாம்பூலச் செல்லம்- அவரின்
     கனிந்தமொழி தேன்பாகு வெல்லம்
அவர்வருகின் றாரென்று முன்கூட்டிச் சொல்லிவிடும்
     ஆகாகா ஜவ்வாது வாசம்வாழ்வில்
     அவர்கொண்டார் யாரிடத்தும் நேசம்.



பொறந்தநாட்டை நெனச்சுப் பாத்துப் பொறப்பட்டு வாங்கயின்னு
போட்டாரு பாருங்கவோர் பாட்டு - - அதைப் போலவுண்டோ ஓர் துருப்புச் சீட்டு
          சிறந்தமுறை போரிட்டுச் செயித்துவிட்ட வீரர்களைத்
                திரும்பிவர வேண்டியதப் பாட்டுபலர்
                தேம்பினாங்க அப்பாட்டைக் கேட்டு
          பிறந்தபோது பார்த்தபய செவிடி தூக்கி நடக்கிறதைப்
பெத்தவன்நீ  பார்த்திடவேண் டாமா?- -உன்றன் பெண்டாட்டி நிலைமை சொல்லப்போமா
          அறிந்தவரை நாட்டுப்பாட்டை குன்றத்தில் ஏற்றியபா
                அதனைப்போல நான்  கண்டதில்லைஆமாம்
                அப்பாட்டிற் கதுவேதான் எல்லை


          சீனயுத்தம் வந்தநேரம் அவரது பெண் அலமேலு
                செயின் வளையல் இரண்டினையும் தந்தாள் அதனைச்
                செய்துப்புட்டு தந்தையின்பால் வந்தாள்
          தானமாக வளையல்களும்  சங்கிலியும் கேட்காமல்
                தந்துவிட்ட சேதியினைச் சொன்னாள்தந்தை
                சாடுவரோ எனப்பயந்து நின்றாள்
          ஏனம்மணி மோதிரத்தை இன்னும்கையில் வைத்துள்ளாய்
                இதையும்தந் திருக்கவேண்டும் பெண்ணே- என்றார்
                இவரிந்தேச பக்தியும் தான் என்னே!
          ஆனதனால் சொல்லுகிறேன் கொத்தமங்கலம் சுப்பு
                அருமையினை மீண்டும் மீண்டும் ஈண்டுபுவியில்

                அவரின்புகழ் வாழியபல் லாண்டு

No comments: