Search This Blog

Tuesday, June 7, 2016

திறவுகோல்
நினைப்பது வேறாய் நடக்கிறது- இறை
நியதி அதில்தான் இருக்கிறது

நெஞ்சில் எதையோ நினைக்கின்றேன் – நான்
நினைப்பது வேறாய் நடக்கிறது
நினைப்பது வேறாய் நடந்தாலும் – சற்று
நிம்மதி அதிலும் தெரிகிறது – இறை
நியதி எனக்குப் புரிகிறது

பஞ்சின் மென்மை உணர்கின்றேன் – அது
படிந்து முறுகித் திரிகிறது
படிந்து முறுகித் திரிந்தாலும் – ஒளி
பரிந்து திரியில் விரிகிறது – அதன்
பயணம் நமக்குப் புரிகிறது

வெயிலில் ஒளியைக் காணுகிறேன் –அது
வெம்மை பெற்றுத் தகிக்கிறது.
வெம்மை பெற்றுத் தகித்தாலும்-புவி
வேகம் அதுதான் கொடுக்கிறது- உயிர்
வித்தை எங்கும் கொடுக்கிறது

பயிலும் சொல்லைப் பெய்கின்றேன் –அது
பாரம் சுமக்க மறுக்கிறது
பாரம் சுமக்க மறுத்தாலும்- ஒரு
பாதி அதுதான் சுமக்கிறது- கவிப்

பாதை அங்கே திறக்கிறது

இலந்தை 

No comments: